அவர் பற்றிய செய்தி இன்று தலைப்புச் செய்தி. கோடிகளைத் தாண்டி ரசிகர்கள் எண்ணிக்கை. அவரது திரைப்படம் வெளியானால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; தியேட்டர்காரர்களுக்கும் திருவிழாதான். அந்த ஒரு பெயர்- நடிகர் விஜய். இதுதான் நடிகர் விஜய்யின் தற்போதைய நிலை.
சாதாரண ஒரு நடிகராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர்தான் விஜய். ஆனால் இன்று அவரது சாதாரண பேச்சு கூட வேண்டாம்; அவர் காட்டும் சின்ன சமிக்ஞையேகூட அரசியல் கவனம் பெறும் நிலையை எட்டியுள்ளது. நடிகர் விஜய் இந்த நிலையை அடைவதற்கு, திரைப்படங்கள் மட்டுமல்லாது அவரது நற்பணி மன்றச் செயல்பாடுகள் முதல் அரசியல் நடவடிக்கைகள் வரை எனப் பல காரணங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
அந்த வகையில், அவரது சினிமா கரியரில் அவருக்கு மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த 5 திரைப்படங்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
பூவே உனக்காக:
நாளைய தீர்ப்பில் கதாநாயகனாகத் தொடங்கிய விஜய்யின் பயணத்தில் தொடக்க காலம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. சொல்லிக்கொள்ளும்படியாக அவருக்கு எந்தப் படங்களும் அமையவில்லை. அந்த நிலையில்தான், இயக்குநர் விக்ரமனுடன் இணைந்தார் விஜய். அந்தப் படம் பூவே உனக்காக. பாடல்கள், வசனங்கள் என அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க விஜய்க்கு முதல் ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது பூவே உனக்காக.
காதலுக்கு மரியாதை:
லிஸ்ட்டில் அடுத்தாக பார்க்கவுள்ள படம் காதலுக்கு மரியாதை. சினிமாவில் ஒரு ஹிட் மட்டும் கைகொடுத்துவிடாது. ஒரு ஹிட் மட்டும் கொடுத்துவிட்டுக் காணாமல் போன பலர் இதற்குச் சாட்சி. அந்த வகையில்தான் அவருக்கு அடுத்த பிளாக் பஸ்டர் படமாக வந்து அமைந்தது காதலுக்கு மரியாதை . பாசில் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான இப்படம் அதுவரை வெளிவந்த காதல் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் அமைந்திருந்தது. துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் காதல் படங்கள் பின் நாட்களில் விஜய்க்கு அமைய, பூவே உனக்காகவும் இந்தக் காதலுக்கு மரியாதை படத்துக்கும் முக்கியமான பங்கு உண்டு.
திருமலை:
பட்டியலில் அடித்ததாக உள்ள படம் திருமலை. வித்யாசமான காதல் படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய்யை ஆக்ஷன் பக்கம் திருப்பிவிட்ட படம் என ரமணா இயக்கத்தில் அவர் நடித்த திருமலையைச் சொல்லலாம். இன்றிருக்கும் விஜய்யின் நடை, உடை, தோற்றம், ஸ்டைல், பாவனை என சகலத்துக்குமான தொடக்கப் புள்ளி திருமலைதான். சாந்தமான ஹீரோவாக அறியப்பட்டுவந்த விஜய், திருமலைக்கு முன்னரும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளார்தான். ஆனால் வெற்றிகரமாக அமைந்த ஆக்ஷன் படமாகவும், வழக்கமான விஜய்யை முற்றாக வேறுபடுத்திக் காட்டியதில் முழுமையான வெற்றியைப் பெற்ற முதல் படமாகவும் திருமலையே பலரது தேர்வாக உள்ளது.
கில்லி:
இந்தப் பட்டியலில் நாம் அடுத்ததாகப் பார்க்கவுள்ள படம் கில்லி. கில்லியைப் பற்றித் தனியாக யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவை இருக்காது. தரணி இயக்கத்தில் வெளியான கில்லி விஜய்க்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கே மிக முக்கியமான படம் எனச் சொல்லலாம். ஏனெனில், அத்தனை ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில், 50 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட முதல் தமிழ்ப் படம் கில்லிதான் என்கிறது சினிமா வட்டாரக் கணக்கு. விஜய் ரசிகர்களுக்கு மற்றுமல்ல பொதுவான ரசிகர்களுக்கும்கூட உங்களுக்குப் பிடித்த விஜய்யின் பெஸ்ட் கமர்சியல் படம் எது எனக் கேட்டால் பெரும்பாலானோர் கை காட்டுவது கில்லியைத்தான். கில்லியைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் இன்றும்கூட டாப் ரேட்டிங் பெறுவதை வைத்தே இப்படத்தின் தாக்கத்தினைப் புரிந்துகொள்ள முடியும்.
மேலும் படிக்க | தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட விஜய்.. வைரலாகும் பர்த்டே Common DP!
துப்பாக்கி:
லிஸ்ட்டில் கடைசியாக நாம் பார்க்கவுள்ள படம் துப்பாக்கி. தமிழ் சினிமா மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவிலேயேகூட ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூல் எனும் இலக்கை அடைவது அப்போதைய காலகட்டத்தில் பெரும் சவால். ரஜினி போன்ற ஒரு சிலரின் படங்கள்தான் இந்தச் சாதனையை நிகழ்த்திக்கொண்டிருந்தன. இப்படியான சூழலில்தான் 100 கோடி ரூபாய் எனும் பெரும் இலக்கைக் குறிவைத்துத் தூக்கியது விஜய்யின் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் விஜய்யின் கரியரில் முதல் 100 கோடி ரூபாய் வசூல் படமாக அமைந்துள்ளது. இன்று 250 கோடி, 300 கோடி என வசூலைக் குவித்து பாக்ஸ் ஆபீஸில் இந்திய சினிமாவிலேயே விஜய் ஒரு மிக முக்கியமான இடத்தில் உள்ளார் என்றால் அதற்குத் ஸ்திரமான தொடக்கப்புள்ளியாக அமைந்த விஜய்யின் டாப் படங்களுள் துப்பாக்கியும் ஒன்று.
மேலும் படிக்க | மாஸ் காட்டும் கமல்ஹாசன்..! விஜய்யின் ‘வசூல்’ இடம் பறிபோகிறதா? ஓர் அலசல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
https://zeenews.india.com/tamil/movies/story-about-some-notable-movies-of-actor-vijay-in-his-career-398533